நான் சாம்ராஜ்

அறிவு எனக்கு சிறகை தருகிறது. அறியாமை ஆசியல்ல, சாபம்.

· · ·

Leave the gun, take the cannoli


நியூயார்க் முதல் சான் பிரான்சிஸ்கோ வரை: ஒரு தமிழ் எழுத்தாளனின் அமெரிக்கப் பயணக் குறிப்புகளும் சினிமா நினைவுகளும்.

பிலிப்பைன்ஸ் பக்கத்துல பசிபிக் பெருங்கடல்ல கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அடி ஆழம் இருக்கு, அங்க போகனும்ன்னு ஆசை.

பேரிங் ஸ்ட்ரைட்ல, அலாஸ்காவும் சைபிரியாவும் சேருற இடம் அங்கயிருந்து ஆர்க்டிக் சமுத்திரம் வழியா ஐஸ்லாந்த் வரைக்கும் வர ஆசை இருக்கு… முடியுமா? தண்ணிக்கு அடில.. ஐஸ்…

சவுத் போல் நடந்து போகனும்… போயாச்சு.. ஹிலாரி ரெண்டு தடவ நடந்து போயிட்டான்.

ஆண்டஸ் மலை பெருந்தொடர் சவுத் அமெரிக்கால நாலாயிரம் மைல்.. not KM.. நீட்டம் அது… உலகத்துலையே பெரிய மலை அது மேல அப்படியே நடந்து போனும் இல்லைனா விமானத்திலயாவது போகணும்.

எனக்கு லேட்டஸ்ட்-ஆ இன்னொரு ஆசை இருக்கு. டோக்யோவிலிருந்து ஹோப்பர் ஹைன்க்கு ஒரு flight இருக்கு.. டோக்யோவிலிருந்து அலாஸ்காவினுடைய தலைநகருக்கு போயி.. நார்த் போல் வழியாக ஹோப்பர் ஹைன்க்கு போகுது. அதுல போன சூரியன் உதிக்கிறதையும், அஸ்தமனம் ஆவதையும் ஒரே நாளில் ரெண்டு மூன்று முறை பார்க்கலாம். அது ஒரு ஆசை.

அமேசான் ஆறு வழியா பெரு நாட்டுக்கு போகணும்ன்னு ஆசை… பெருவுல இருந்துதான் அமேசான் ஆறு உற்பத்தி ஆகிறது…

– 1970-களின் தொடக்கத்தில் நடிகர் M. N. நம்பியார் நேர்காணல் ஒன்றில்.

வாழும் தமிழ் இலக்கிய திருவிழா முடிந்து நானும் என் சகோதரன் கவுதமனும் நியூ ஜெர்சியிலிருந்து, நியூயார்க் நகரத்திற்கு புறப்பட்டோம் ஹட்சன் நதிக்கு அக்கரையில் உறைந்த சித்திரம் போல நியூயார்க் நகரம் புகை மூட்டமாய் நின்றது.

………

மெட்ரோவில் ஏறி Twin Towers அருகிலிருக்கும் Fulton-ரயில் நிலையத்தில் இறங்கினோம். புதுபிக்கப்பட்ட World Trade Center பிரம்மாண்டமாய் பளிங்கு நிறத்தில் தரையும் சுவருமாய் விரிந்து கிடக்க வெளியே இன்னும் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்க, St. Paul’s தேவாலயத்தை கடந்து, பலவண்ண உணவகங்களை கடந்து, எல்லாவற்றுள்ளும் தவறாது நியான் விளக்குகள் பளிச்சிட, பலவித ரோல்கள் அமெரிக்கர்களின் பசியை நம்பி காத்திருந்தன.

Ann-தெருவிலிருக்கும், Aloft விடுதியில் தங்கினோம். அதுவொரு குறுகலான தெரு, பழைய கட்டடங்களில் கட்டுமான பணி நடந்துகொண்டிருக்க, சீன பெண்மணி பெரிய கவரில் வைத்து உணவு பொதிகளை விற்றுக்கொண்டிருந்தாள். கட்டுமான பணியாளர்கள் உடல் உழைப்பாளர்கள் அவசர அவசரமாக வாங்கிக்கொண்டு போனார்கள். சீக்கிரமாக காலியானது. உலகமெங்கும் ஒரே மதியம்தான், ஒரே பசிதான்.

………

நியூயார்க் நகரில் நடந்தே திரிந்தோம். மிக முக்கியமான ஒன்றை உணர முடிந்தது. மூன்றாம் உலகை சேர்ந்த ஒரு மனிதன் 60-களில், 70-களில் பிறந்தவர்கள், காமிக்ஸ் படிப்பவர்கள் மனதில் நியூயார்க் நகரைப் போல வேற எந்த ஒரு நகரமும் அத்தனை ஆழமான சித்திரமாக பதிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனது கொடை மடம் நாவலில் 80-களின் மதுரையை தீட்டியவன் நான். ஆனால், அது நான் வாழ்ந்து பெற்ற சித்திரம். நியூயார்க் நகரம் எனக்குள் சித்திரமாக பதிந்திருக்கிறது.

இயக்குனர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் நடிகை தேவிகாவிற்கு போன பிறவி ஞாபகம். இப்பிறவியில் அந்த ஊரில் நடக்க நடக்க வரும் அதுபோல எனக்கு நியூயார்க்கின் சாலைகள், கட்டிடங்கள், உணவகங்கள், ரயில் நிலையங்கள், நடக்க நடக்க சித்திரமாய் எழுந்தன.

நியூயார்க் நடந்து காண வேண்டிய நகரம் செவ்வக சதுரமாகவே அது வடிவமைக்கப்படுள்ளது, வழி தவற வாய்ப்பே இல்லை.

என் தாத்தா மதுரை எழுகடல் தெருவில் ஜவுளிக்கடை வைத்திருந்தார். அந்த தெரு முழுக்கவே ஜவுளிக்கடைதான். சித்திரை மாதம் வருவதற்கு முன்பே வியாபாரிகள் ஒன்று கூடிப் பேசி வேனல் பந்தல் போட்டுவிடுவார்கள், தெருவிற்குள் வெயிலே கிடையாது, எப்பொழுதும் மோடம் தான். நியூயார்க் நகரில் நான் அதையே உணர்ந்தேன். உயரமான கட்டிடங்கள் வெயிலை தரையிறங்க அனுமதிப்பதில்லை. அதன் நிழல்கள் எப்பொழுதும் ஒரு மோன மோடத்தை உருவாக்குகின்றன.

………

103 தளங்களை கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 75வது தளத்தில், ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷைர் (ஞாபகத்தில் இருந்து வரைவதில் உலகப்புகழ் பெற்றவர்) 2009-ல் 20 நிமிட ஹெலிகாப்டர் பயணத்தில் பார்த்தவற்றை அவருடைய ஞாபகத்தில் இருந்து வரைந்த ஓவியத்தை பெரும் சித்திரமாக சுவற்றில் இருக்கும்.

அந்த சித்திரங்களை பக்கத்தில் போய் பார்த்தால் வெறும் கோடுகளாகத்தான் இருக்கும். சற்று தள்ளி நின்று பார்த்தால் நியூயார்க் உயிர் பெற்று எழும். அந்த ஓவியம் சூசமாக ஒன்றை சொல்கிறது, இந்த நகரம் அப்படிதான் இயங்குகிறது. இந்த கோடுகளுக்குள் வாழத்தான் உலகமெங்குமிருந்து மனிதர்கள் புறப்பட்டு வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டை துறக்கிறார்கள். அவர்களின் கனவாக அந்த நகரம் இருக்கிறது.

நகரம் என்பதே முடியாத கட்டுமானமும், அணையாத விளக்குகளும் தானே, அந்த அணையாத விளக்குகள் அவர்களை அழைத்துக்கொண்டே இருக்கிறது. ஸ்பைக்லியின் Highest 2 Lowest திரைப்படம் இந்த நகரத்தில் அலையும்போது ஓர்மையில் வந்துகொண்டே இருந்தது.

…….

நியூயார்க் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிற்கும் பொழுது உண்மையில் பயமும் பரவசமுமாக இருந்தது. உலகில் உள்ள அத்தனை தேசிய இன முகங்களும் நம்மை கடந்து போகின்றன. இவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தது எது? இவர்களின் வேர்களும் விழுதுகளும் எங்கு இருக்கின்றன? நகரத்திலிருந்து வெளியேறி விறு விறுவென நீள் கோர்ட்டுகளும், அலட்சிய உடைகளுமாய் மனிதர்கள் ஒவ்வொரு கதவு வழியாக திறந்து திறந்து மறைந்து போகிறார்கள்.

தீம் பார்க்குகள் போன நூற்றாண்டில் தான் உருவானவை. ஆனால், அதற்க்கு முன்பே நகரம்தான் மனிதன் உருவாக்கிய முதல் தீம் பார்க். அதன் கவர்ச்சி மனிதர்களை நூற்றாண்டுகளாய் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன.

மாறி மாறி அருங்காட்சியங்கள் நூலகங்கள் என போய்க் கொண்டே இருந்தோம். அமெரிக்காவில் நான் மிகுந்த பரவசத்தோடு கண்டது அருங்காட்சியககங்களே. அவைகள் மிக நேர்த்தியாக பராமரிக்கப் படுகின்றன. ஒரு அருங்காட்சியத்தைப் பார்த்து முடிக்கவே வாழ்நாள் போதாது என்றே தோன்றுகிறது.

“ஈரான் என்ற நாகரிகம் இன்று இரவோடு இல்லாது அழிக்கப்படும்” என்று ட்ரம்ப் அச்சுறுத்தியது மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அந்த காலையில் ட்வின் டவர்க்கு எதிரே வில்லோ கேஃபேயில்தான் அமர்ந்திருந்தோம் யாரும் அதை பெரிய செய்தியாக கருதவில்லை, தொலைகாட்சியின் சத்தத்திற்கு மேல் Half-Sugar, Half-Cream, போன்ற உரையாடல்கள் ட்ரம்பின் குரலை தாழ்த்தின.

…..

நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனுக்கு காரில் சென்றோம். அது தலைநகருக்கே உண்டான குணாம்சத்தோடு ஆன்மாவற்று அரசு கட்டிடங்களாக பல்லாயிரம் ஏக்கர்கள் பரந்து விரிந்து கிடக்க, வெள்ளை மாளிகை வாசலில் கப்பல் கார்களில் Mission: Impossible Tom Cruise போல நீள் கோர்ட்டு அணிந்தவர்கள் பரபரப்பாக ஏறவும் இறங்கவுமாக இருந்தார்கள். ட்ரம்ப் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்ல கூடிய மெக்சிகன்காரர்களின் உணவு வண்டிகளும் வெள்ளை மாளிகை வாசலில் நின்றன.

வெள்ளை மாளிகை வாசலில் ஈரான் யுத்தத்தை எதிர்த்து ஆர்பாட்டம் நடந்துக்கொண்டிருந்தது. The Godfather படத்தின் தொடக்க வசனம் அங்கு மிகவும் பொருந்தியது.

“I believe in America…”

…….

அமெரிக்கா அதன் சாலைகளின் வழியாகத்தான் இயங்குகின்றன, ரயில்கள் ஆடம்பரம், எட்டு வழி சாலைகளில் கார்கள்… கார்கள்….கார்கள்… எலி மூஞ்சி ட்ரக்குகள், அமேசான் சரக்கு வாகனங்கள் இடை இடையே Recreation வாகனங்கள், மிக மிக அரிதாய் இருசக்கர வாகனங்கள், Interstate Highway களில் விரைந்து கொண்டிருக்கின்றன.

வாஷிங்டனிலிருந்து சிகாகோவுக்கு சாலை வழியாக பதினெட்டு மணி நேர பயணம், அதிகாலையில் சிகாகோ தனது skyline-களின் வழி வானை குத்திக்கொண்டு நிற்க, எனக்கு மாக்சிம் கார்க்கியின் அர்த்தமோன்கள் (மூன்று தலைமுறைகள்) நாவலின் தொடக்கம் நினைவுக்கு வந்தது. அவர்கள் பீட்டர்ஸ் பெர்க் நகரத்தை, அதன் தங்க நிற கோபுரத்தை, மாளிகைகளின் கூம்புகளை வெகுதூரத்தில் இருந்து பார்ப்பார்கள்.

நகரங்களை கண்ணாடியின் வழியாக, உயர்ந்த கட்டிடங்களிலிருந்து, வானிலிருந்து, தூரத்திலிருந்து, பார்ப்பது இனிமையானது.

சிகாகோவை நியூயார்க்கோடு ஒப்பிடும்போது கொஞ்சம் நிதானமாய் இயங்குகிறது. மைசூர் போல அது வேறு ஒரு காலத்தில் திளைக்கிறது. ஆனால், இடையிடையே அதன் சாலைகளில் பைக்குகளை அலட்சிய இளைஞர்கள் ஒற்றை சக்கரத்தில் உறுமலுடன் ஓட்டிக் கொண்டு போகிறார்கள்.

The Untouchables, Road to Perdition, Sinners வழி நான் பார்த்த சிகாகோ.

நண்பர் கீர்த்திவாசனும் நானும் மே தினத்திற்கு அடிப்படையான எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம் போன்ற உரிமைகளை கேட்டு போராட்டம் நிகழ்ந்த Hey Market-டை தேடிப் போனோம்.

ஒரு ஹோட்டலின் முன்புறம் எதிரே Filson ஜீன்ஸ் நிறுவனத்தின் விளம்பர போர்டில் Cowboy நாயகன் குதிரையோடு முறைத்து பார்த்துக்கொண்டிருக்க அந்த நினைவு சின்னம் அனாதையாக நின்றது. உலகின் பல்வேறு நாடுகளின் இடதுசாரி கட்சியின் பெயர்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன. தோழர்கள் நினைவு சின்னத்தில் மாட்டு வண்டியின் மேல் நின்று பேசிகொண்டிருக்க உயர்ரக கார்கள் அதை பொருட்படுத்தாமல் விரைந்துகொண்டிருந்தன.

சிகாகோவில் Broadway வாசலருகே தலைக்கு மேல் பழைய இரும்பு பாலத்தில் ரயில்கள் தட தடக்க மென்மஞ்சள் வெளிச்சத்தில் அங்கு நிற்கும் பொழுது காலம் மயங்குகிறது. எத்தனையோ ஹாலிவுட் படங்களில் என்னென்னவோ நிகழ்ந்த இடம்.

நண்பர்கள் கீர்திவாசனும், மில்வாக்கி பாலாவும், சாகசக்காரர் ராஜசேகரும் பெரும் பிரியத்தோடு குறுக்கு வெட்டில் நகரத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

கறுப்பர் வாழும் பகுதி நகரத்திற்கு சம்பந்தம் இல்லாமல் உடைந்த கட்டிடங்களோடு, நிறைய தேவாலயங்களோடு, பேருந்துகளிலிருந்து இறங்கும் பெண்மணிகள் பெரிய பைகளை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் அறிஞர் அண்ணாவின் “வேந்தே சாலையில் வேலையற்றதுகள். அதன் மனதில் விபரீத எண்ணங்கள்” என்ற வரிகளுக்கு பொழிப்புரையாக நின்றுகொண்டிருந்தார்கள். City of God திரைப்படத்தின் ஒரு Frame போல் இருந்தது. அங்கிருந்தும் சிகாக்கோவின் வானை முட்டும் கட்டிடங்கள் தெரியத்தான் செய்கின்றன.

என் அண்ணன் வீடு கலை படம்போல் மிக அமைதியாக இயங்கியது. மெலிதான சத்தத்தில், குறைந்த சொற்களில் உரையாடினார்கள். “சிறிது வெளிச்சத்திலேயே” நடமாடினார்கள்.

……..

ஒரு நுட்பமான அனுபவமும் உண்டு. நான் அங்கிருந்த 25 நாட்களில் இந்தியாவில் இருப்பவர்களின் இரவை பார்ப்பது போன்ற ஓர் உணர்வு. அவர்கள் உறங்கும்பொழுது நான் விழித்து இருக்கிறேன், வீட்டையும் நண்பர்களையும் நினைக்கும்பொழுதே மிக பிரியமாக இருந்தது. கவிஞர் இசையிடம் இதை சொன்னேன் அதற்கு அவர் “ஏம்ப்பா இவங்கல்லாம் தூங்குறப்ப எவ்ளோ அழகா அன்பா இருக்காய்ங்க அவைங்க ஏந்திரிச்சுட்டாதான் சிக்கல்ன்னு சொல்ல வர” என்று சிரித்தபடி கேட்டார்.

……

எல்லா நகரங்களிலும் வீடு அற்றவர்கள் நகர சதுக்கங்களிலும், நடைபாதைகளிலும் படுத்திருக்கிறார்கள், பெரும்பாலும் கறுப்பினத்தவர் ஒரு பெரிய கம்பளியும் பழுதடைந்த காலணியும் கிழிந்த தோல் பையுமாக அமர்ந்திருக்கிறார்கள். எதையாவது நோட்டில் கிறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

நியூயார்க்கில் ANN-தெருவில், மத்திய வயதுடைய கறுப்பின பெண் ஒருத்தி, தன் இணையையோ அல்லது துணையையோ மிக மோசமான சொற்களில் ஏசிக்கொண்டிருந்தாள். அவன் சாலையின் மறுபக்கத்தில் இருந்தான். யாருமே அவள் பேசுவது காதில் விழாததைப்போல போய்கொண்டிருந்தார்கள். அவள் தன் வசவுகளின் வழி என்னை தல்லாகுளத்திற்க்கு அழைத்துப்போனாள். ஒவ்வொரு நாள் காலையும் அங்கு கோணவாய் சொர்ணம் தன் கணவனை ‘தூமையகுடிக்கி,’ ’சாண்டையகுடிக்கி’ என்றே ஏசத்துவங்குவாள் அவளின் அமெரிக்க பதிப்பல்லவா இவள்.

குளிரும் சேர்ந்து கூடுதலாக பாவப்படவர்களை துன்புறுத்துகிறது.

பார்புகழும் மார்கழியை

ஏன் டிசம்பர்

பாதியிலே கை விட்டு போகிறது

என்ற ஞானக்கூத்தன் கவிதையை யாரேனும் இவர்களிடம் வாசித்தால் தூக்கி போட்டு மிதிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

……

இந்நிலத்தில் அந்நியர்களைப் பார்த்தால் சிரிக்கிறார்கள், சின்னதாய் நலம் விசாரிக்கிறார்கள் அந்த நாளைப் பற்றி கேட்கிறார்கள், முகமன் கூறுகிறார்கள். இது அந்த நிலத்தின் நல்கூறு. பெசன்ட் நகரில் ஆண்டு கணக்காக காலை நடை போகும் எனக்கு, ஏன் எதிர்ப்படுகின்றவர்களை பார்த்து புன்னகைக்க தோன்றவில்லை அவர்களுக்கும் தோன்றவில்லை.

….

சான் பிரான்சிஸ்கோ நகரம் ஏற்ற இறக்கமான சாலைகளோடு ஒப்பிட்டளவில் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற உணர்வு மிக குறைவாக தோன்றவைக்க கூடிய நகரம். ஆளற்ற ஊபர் கார்கள், பழைய காலத்தின் மிச்சமான ட்ராம்கள், குறியீடான Lombard Street, துல்லியமான நீல நிறத்தில் பசிபிக் பெருங்கடல், சாண்டியாகோ போகும் வழியில் பூமியிலேயே சொர்க்கமென இருக்கும் Winery-கள், 1800-களிலேயே இருக்கும் ஓல்ட் டவுன்கள், பேரற்புதமான கடற்கரை சாலைகள்.

டேவிட் அட்டேன்போரோவின் நூறாவது பிறந்தநாள் உரையை அறியாமல் படுத்திருக்கும் அப்பாவி சீல்கள்.

……

இந்தப் பயணம் எனக்கு நிறைய தந்தது, அமெரிக்காவின் மூன்று விதமான நேர மாறுபாடுகள் கொண்ட நிலங்களின் ஊடாக அலைந்தேன். வான்கோ, கிளாடி மானேவின் அற்புதமான ஓவியங்கள், நீண்ட கார் பயணங்கள், சிகாகோ நண்பர்கள் கீர்த்தி, பாலா, ராஜசேகர், சான் பிரான்சிஸ்கோ பத்மாநாபன், பாலாஜி.

இதற்கு மூலகாரணமாய் இருந்த ஜெயமோகன் சாரை மிக நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்கிறேன். மிகுந்த பிரியத்துடன் சான் பிரான்சிஸ்கோ தோழர்கள் ஞானபிரகாச பாண்டியனையும், ஜேசுவையும், சுந்தரபாண்டியனையும், அருள், முரளி, ரோகனையும்.

….

இந்தக் கட்டுரையை நம்பியாரின் மேற்கோளோடு துவங்கினேன். நம்பியாரையும் துப்பாக்கியையும் ஒருபோதும் பிரிக்க முடியாது.

The Godfather திரைப்படத்தில் மைக்கேலின் ஓட்டுனர் காட்டோ, சுதந்திர தேவியின் சிலை பின்னணியில் வெகு தூரத்தில் இருக்க, ஒரு புல்வெளியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவார். அப்பொழுது மைக்கேலுக்கு பயிற்சி கொடுக்கும் பீட்டர் ஒரு வசனம் சொல்வார்,

Leave the Gun, take the Cannoli

இந்த பயணத்தில் நான் துப்பாக்கியை துறந்தேனோ அறியேன், ஆனால் நிறைய நிறைய தோழமைகளையும், மகிழ்ச்சியையும், கனவுகளையும், தித்திப்புகளையும் எடுத்துக்கொண்டே திரும்புகிறேன்.

நான் அந்த புனித பீட்டரை விட இந்த பீட்டரை மிகவும் நேசிக்கிறேன். வழிக்காட்டியதற்கு மிகவும் நன்றி பீட்டர்…

எழுத்தாளர்

சாம்ராஜ்

சாம்ராஜ் தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார்.

மேலும் அறிய →

Leave a comment